இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 டிசம்பர், 2017

இறைவேதத்தை மறுப்போரும் ஏற்போரும்

Image result for hell and heaven
இன்று வாழ்வோர் அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக விளங்கும் உண்மைகள் சில உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது...
-    நாமாக நாம் இங்கு வரவில்லை.
-    நமது உடல் பொருள் ஆவி இவற்றின் உரிமையாளர் நாமல்ல.
-    இமாபெரும் பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான பூமி என்ற ஒரு துகளின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்துகள் போன்றவர்கள் நாம்.
-    நம்மை மீறிய ஒரு அதிபக்குவமான நுண்ணறிவும் அளவிலா வல்லமையும் கொண்ட சக்திதான் இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் நம்மையும் நமது உடலின் உட்கூறுகளையும் அதிபக்குவமான முறையில் உருவாக்கி இடையறாது இயக்கி பரிபாலித்து வருகிறது.
-    ஆறடி உயரம் நிற்கும் அற்ப மனிதராகிய நமது ஆயுளும் நீர்க்குமிழி போல மின்னி மறைவதே.
நம்மைப்பற்றிய உண்மைகள் இவ்வாறிருக்கும்போது நம்மை மீறிய அந்த மறைவான சக்தி நம்மோடு உரையாட முற்பட்டால் அதை செவிகொடுத்துக் கேட்டு சொல்லப்படுபவை உண்மையா பொய்யா ஆய்வு செய்வதே உண்மையான பகுத்தறிவு. மாறாக அவற்றுக்கு செவிசாய்க்காமல் மனோஇச்சைக்கு வழங்கி கண்மூடித்தனமாக மறுப்பது என்பது அறிவீனமான ஒரு நடவடிக்கை என்றுதானே சொல்லமுடியும்?
= அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, இவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப் பட்டு விட்டதா? (திருக்குர்ஆன் 47:24)

=  (நபியே!) இவ்வேதத்தை நாமே உங்கள்மீது இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (திருக்குர்ஆன் 38:29)

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது இறுதிவேதமான திருக்குர்ஆன் மூலம் இன்று இவ்வுலகில் வாழும் மக்களோடு பேசுகிறான். இதை பகுத்தறிவோடு ஆராய்ந்து அதன் வழிகாட்டுதல்களை ஏற்று வாழ்வோர் இந்த வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவு பெறுகிறார்கள். ஆக்கபூர்வமான முறையில் இவ்வுலக வாழ்வை வாழ்கிறார்கள். மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் என்ற வாழ்விடத்தைப் பரிசாகப் பெறுகிறார்கள். மாறாக இவ்வேதத்தைக் கண்மூடித்தனமாக மறுப்ப்போர் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய தெளிவின்மையால் குழப்பம் நிறைந்த வாழ்வு வாழ்கிறார்கள். படைத்தவனின் கட்டளைகளை மீறிய குற்றத்திற்காக மறுமையில் வேதனைகள் நிறைந்த நரகம் என்ற வாழ்விடத்தை தண்டனையாகப் பெறுகிறார்கள்.

முன்னோர்களின் வழக்கங்களின் மீதுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகள், நாட்டுவழக்கம், தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட கடவுளர்கள் மீதுள்ள பக்தி, இயக்க சார்பு, அகங்காரம் போன்ற பல காரணங்களின் பொருட்டாலும்  தங்கள் இதயத்திற்குத் தாளிட்டு இவ்வேதத்தைப் புறக்கணிப்போரைப் பற்றியும் அவர்களால் வழிகெடுக்கப்பட்ட மக்களைப்பற்றியும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
= 16:24உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்என்றே அவர்கள் கூறுகின்றார்கள்.
= 16:25இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!
தொடர்கதை
இன்று எவ்வாறு இறுதிவேதம் உள்ளதோ அதைப்போலவே இறைவன் இதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் தன் தூதுச் செய்தியை பல்வேறு இறைத்தூதர்கள் மூலம் அனுப்பி வந்துள்ளான். அவற்றையும் மறுப்பவர்கள் இருந்தே வந்துள்ளார்கள். படைத்தவனை மட்டுமே வணங்கி வாழவேண்டும் படைப்பினங்களையும் மனிதர்களையும் வணங்குவது பாவம் என்ற இறைச் செய்தியைப் புறக்கணித்து தாங்களாக உருவாக்கியவற்றை கடவுளர்களாக பாவித்து வணங்கினார்கள். படைத்த இறைவனுக்கு முன்னால் மறுமையில் விசாரணை உண்டு, சொர்க்கமும் நரகமும் உண்டு என்று தூதர்கள் எடுத்துரைத்தபோது அவர்களை ஏளனம் செய்தார்கள். அந்தப் புனிதர்களையும் சத்தியத்தைப் பின்பற்றியோரையும் வேதனைகளும் சித்திரவதைகளும் செய்தார்கள்.  பூமியில் அட்டூழியங்கள் செய்தார்கள். குழப்பங்கள் விளைவித்தார்கள். அதர்மத்தை வளர்த்தார்கள். அவர்களின் கொடுங்கோன்மை முற்றிய நிலையை அடையும்போது இறைவன் அவர்களை அழிக்கவும் செய்துள்ளான். ஆனால் அவர்கள் செய்த பாவங்களுக்கான உண்மையான தண்டனை மறுமையில் காத்திருக்கிறது. அவர்களைப்பற்றியும் அவர்களின் மறுமை நிலை பற்றியும் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:  
= 16:26இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால்,  இறைவன்  அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டிடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்!
=16:27மேலும், அவர்களிடம் கேட்பான்: இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: இன்று இழிவும், துர்பாக்கியமும் சத்திய மறுப்பாளர்களுக்கே!

உயிர் கைப்பற்றும்போது சரணடைதல்
= 16:28அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான்.

மோசமான தங்குமிடம்
= 16:29இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.

சத்திய சீலர்களின் உன்னத நிலை
வேதத்தை கண்மூடித்தனமாக மறுத்தோரின் மேற்கூறப்பட்ட நிலைக்கு நேர் எதிரானது வேதத்தை ஏற்று அதன்படி வாழ்ந்தோரின் நிலை.  
= 16:30(மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும்.
= 16:31அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இறைவன்  இவ்வாறே கூலி வழங்குகின்றான்.
உயிர் கைப்பற்றப் படும்போது சாந்தி!

= 16:32அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக