இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 அக்டோபர், 2017

ஜீரணமா இல்லை மரணமா?

எதையுமே உரிய முறையில் ஆராயாமல் பொருட்களின் வெறும் வெளித்தோற்றத்தை அடிப்படையாகக் கொணடு ஊகித்து அவசரகதியில் உருவானவையே நாத்திக சித்தாந்தங்கள் என்பதை நாள் செல்லச்செல்ல அறிவியல் வளர்ச்சி நமக்கு வெளிப்படுத்துகிறது. நாத்திக ஆதரவாளர்கள் தங்கள் அணுகுமுறைகளுக்கு அறிவியல் சாயம் பூசினாலும் நவீன அறிவியல் வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் அந்த சாயத்தை வெளுக்கவைத்து விடுகின்றன என்பதை ஆராய்வோர் அறியலாம்.
 உதாரணமாக நமது உணவு ஜீரணிக்கும் செயலை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில் ஜீவராசிகள் தோன்றிய முதலே தொடர்ந்து நடந்துவரும் ஒரு செயல்தான் ஜீரணம் என்பது. அந்த ஜீவராசிகள் உயிர்வாழ அடிப்படையான காரியம் அது. உயிரினங்களின் தோற்றத்திற்கு அவர்கள் பல்வேறு புனையப்பட்ட காரணங்கள் சொன்னாலும் உயிரினங்கள் தொடர்ந்து உயிர்வாழ ஜீரணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த ஜீரணக் கிரியை நடக்க வேண்டுமென்றால் அது தொடர்பான அனைத்து உறுப்புக்களும் இன்று எவ்வாறு பக்குவமான அமைப்பில் பக்குவமான முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு கட்டமைப்பாக பக்குவமான கட்டளைக்குக் கீழ் இயக்கப்படுகின்றனவோ அவ்வாறே உயிரினங்கள் தோன்றிய முதலே அவை இயக்கப்பட்டு வந்திருக்கவேண்டும். அப்போதுதான் உருவான உயிர் வாழவும் நிலைநிற்கவும்  முடியும். தேவைகேற்ப உறுப்புக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களில் தானாகவே பரிணமித்தன என்ற வாதம் பொய்யான கற்பனையில் உருவானது  என்பதை எந்த ஒரு சாமானியனும் புரிந்துகொள்ள முடியும்.
நாளுக்கு நாள் வளரும் அறிவியல் புதுப்புது உண்மைகளை வெளிப்படுத்தும்போது நமது உடலுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் பின்னால் ஒரு நுண்ணறிவும் சர்வவல்லமையும் கொண்ட படைப்பாளன் இருக்கிறான் என்ற உண்மை ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. உதாரணமாக நமது உடலின் பல்வேறு பாகங்களை மின்னணு நுண்ணோக்கிகளின் (elctron microscope) வழியாக ஆராயும்போது அவற்றில் எவ்வளவு நுணுக்கமான அமைப்புகளும் சிக்கலான (complicated) இணைப்புகளும்  இயக்கங்களும் நிர்வாகமும் அவற்றின் இன்றியமையாமையும் புரிய வருகிறது. அவை அதி துல்லியமான நுண்ணறிவு கொண்டவனும் அனைத்துக் காரியங்களையும் பக்குவமாக அறிந்தவனும் நிர்வகிப்பவனும் திட்டமிடுபவனும் ஆகிய இறைவனால் வடிவமைக்கப்பட்டு பரிபாலிக்கப்படுகின்றன என்ற உண்மையை உறுதி செய்கின்றன.
= (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; அவைகளை ஒழுங்குபடுத்தினான். மேலும் (படைப்பினங்களுக்குரிய) விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
ஜீரணம் என்ற அற்புதம்
மனித உடலில் ஜீரணம் என்பது நடக்கவேண்டும் என்றால் கீழ்கண்டவை கண்டிப்பாக இருக்கவேண்டும். இவையெல்லாம் ஒரு படைப்பாளன் இன்றி நடைபெற இயலுமா என்பதை சிந்தித்துப்பாருங்கள்:
= முறையாக வரிசைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்ட ஜீரண உறுப்புக்கள் மற்றும் உணவு ஜீரணிக்க உதவும் சுரப்பிகளின் கட்டமைப்பு (digestive system),  ஜீரணத்தின்  பயன்களை (தெம்பு, இரத்த அணுக்கள், புரதம் போன்றவற்றை) உள்வாங்கக் கூடிய உறுப்புக்களின் கட்டமைப்பு, இவைகள் முறையாக ஒன்றுக்கொன்று இணைக்கப்படுதல், அதற்கான இயங்கமைப்பு (control mechanism) மற்றும் மென்பொருள்(software), திறன் மூலம் (power source) நிர்வாகம் என்பவை தேவை.     
= உண்பதற்குத் தகுதிவாய்ந்த பொருள் – அதாவது ஜீரணக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஜீரணம் ஆகக்கூடிய, சுவையுள்ள, உண்டால் உடலுக்கு சக்தி, பசியாறுதல், வளர்ச்சி போன்ற பயன்களைத் தரக்கூடிய உணவுப்பொருள் - இருக்க வேண்டும்.
= உண்பதற்கான நாட்டம் அல்லது தேவை உண்பவருக்கு ஏற்படவேண்டும். பசி, உணவு இருக்கும் இடம் அறிதல், அவற்றை நோக்கி நடத்தல், இவற்றுக்குரிய சக்தி போன்றவை.
= அப்பொருள் உண்பதற்குத் தகுதிவாய்ந்ததென அறிவிக்கும் வாசம், சுவை, நிறம், மென்மை போன்ற குணங்கள் அப்பொருளுக்கு இருக்கவேண்டும். உண்பவருக்கு அவற்றைப் பிரித்தறிய மற்றும் தகுதியைப் பரிசோதிக்கும் உணர்வாற்றல் இருக்கவேண்டும்.
= உணவுப்பொருள் வாயை அடையவேண்டும் - உணவை ஊட்டுவதற்கான ஏற்பாடு வேண்டும். அதாவது கை மற்றும் விரல்கள் இவற்றின் மூட்டுகள் ஒத்துழைத்து உணவை பிடித்தல், பிசைதல், ஊட்டுதல் போன்றவை நடைபெற வேண்டும்.
= வாய்க்குள் உணவை மெல்லுவதற்கு மேல்தாடை, கீழ்த்தாடை, சரியான அமைப்பில் வரிசைப்படுத்தப்பட்ட பற்கள், சுவை உணரும் நாக்கு, சரியான விகிதத்தில் உமிழ்நீர் சுரப்பு, அதற்கு கட்டளையிடும் மற்றும் கட்டுபடுத்தும் இயங்கமைப்பு, அரைத்த உணவு வெளியே சிந்தாமல் தடுக்கக்கூடிய வகையில் பற்களும் மென்மையான உதடுகளும் இவற்றைத் தேவையுணர்ந்து கட்டுப்படுத்தக்கூடிய இயங்கமைப்பு மற்றும் மென்பொருள் தேவை.
= அரைத்த உணவை அடுத்த கட்டத்திற்கு – உணவுக் குழாய்க்கு -  அனுப்ப வாய் என்ற கூட்டுடன் உணவுக்குழாய் உரியமுறையில் இணைத்தல். தொண்டை என்ற ஜங்க்ஷனில் அரைபட்ட உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் அதை உணவுக் குழாய்க்குத் திருப்புவதற்கு உரிய வால்வ் (valve), இதற்கு வேண்டிய இயங்கமைப்பு, மென்பொருள் போன்றவை.
= இதைப்போலவே அடுத்து வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என ஜீரண உறுப்புக்கள் அனைத்திலும் என்ன தேவை என்பதை நீங்கள் ஊகிக்கலாம். மேற்கூறப்பட்ட தேவைகள் ஒரு உதாரணத்திற்காக கூறப்பட்டவை மட்டுமே. இங்கு கூறப்படாத பல தேவைகளும் உள்ளன.
சுருக்கமாக..
சுருக்கமாகச் சொல்வதென்றால் இதுபோல நாம் உண்ணும் உணவின் ஜீரணப்பாதையில் அமைந்துள்ள வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம், சிறுகுடல் பெருங்குடல் போன்ற உறுப்புக்களும் சுரப்பிகளும் அவற்றுக்கே உரிய வெளி அமைப்பையும் மற்றும் உள் அமைப்பையும் நுண்ணிய அங்கங்களையும் இயங்கமைப்பையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அரைபட்ட உணவுப்பொருள் ஜீரணப்பாதையில் பயணிக்கும்போது குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட அளவில் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட தன்மைகளோடு திரவங்கள் சுரக்க வேண்டும். அவை உணவுப்பொருளோடு கலக்க வேண்டும். அந்தக் கலவை ஒரு உறுப்பில் இருந்து அடுத்த உறுப்பிற்கு கடத்தப்பட வேண்டும். அவ்வாறு கடத்தப்படும்போது இடையே அக்கலவையின் தரக்கட்டுப்பாடு (quality control) செய்யப்பட்டு தரம்குறைந்தவை கழிக்கப்படவும் (filter) வேண்டும். இறுதியில் ஜீரணத்தின் பயன்கள் அவற்றுக்குரிய உறுப்புக்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அவற்றை தரம் பரிசோதித்து அந்த உறுப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இவ்வாறு பல பணிகளும் ஒருங்கிணைப்போடு நடத்தப்பட வேண்டுமானால் அதற்கான இயங்கமைப்பு, மென்பொருள், திறன்மூலம், நிர்வாகம், பரிபாலனம் என பலவும் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் வரையறுக்கப்பட்ட முறையில் தானியங்கியாக மிகப் பக்குவமாக நிர்வகிக்கபடவும் வேண்டும்.
இந்த வழிமுறைகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மீறப்பட்டால் அங்கு  நடப்பது ஜீரணம் அல்ல, மரணம்! ஏனெனில் இந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மீறப்படும்போது உணவு உணவாக இருக்காது. மாறாக அது நஞ்சாக மாறிவிடும் என்பதை நாம் அறிவோம். இதுவரை நாம் கூறியது ஜீரணத்தை நடத்தும் கட்டமைப்பு பற்றி மட்டுமே. இதுபோல எலும்பு (Skeletal) , தசை (muscular), சிறுநீர் (urinary), நரம்பு (nervous), ஜீரணம் (digestive), நாளமில்லா சுரப்பி (endocrine), இனப்பெருக்கம் (reproductive), சுவாசம் (respiratory), இதயம் மற்றும் இரத்தக்குழாய் (cardiovascular), தோல் (integumentary),  நிணநீர் (lymphatic) போன்றவற்றோடு தொடர்புள்ள கட்டமைப்புகள் உங்களது எந்த முயற்சியும் உழைப்பும் பொருட்செலவும் இல்லாமல் இயக்கப்பட்டுக் கொண்டு வருகின்றதல்லவா? அந்த இறைவனுக்கு நாம் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டாமா?
= மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான். மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான். (திருக்குர்ஆன் 82:6-8)


= நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன்  2:28) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக