இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

திக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்!


 மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ....  (திருக்குர்ஆன் 3:110)
இன்று நாம் வாழும் நாட்டில் நமக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை மேற்படி இறைவசனம் எடுத்துச் சொல்கிறது. ‘சிறந்த சமுதாயம்’ என்ற அந்தஸ்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டும். தொழுகை நோன்பு என்ற ஆன்மீகக் கடமைகளை தவறாமல் நிறைவேற்றும் அதேவேளையில் நற்காரியங்கள் செய்வதிலும் நன்மை வளர்ப்பதிலும் நாம் ஈடுபட்டே ஆகவேண்டும். நம்மைச்சுற்றி – நாம் தொழும் பள்ளிவாசல்களைச் சுற்றி – ஏழைகளும் வறியவர்களும் இன்ன பிற தேவை உடையவர்களும் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர்களை நாம் அலட்சியப் படுத்த முடியுமா? அன்றாடம்  வீட்டிலிருந்து தொழுகைக்காக செல்லும் வழியில் காணும் அவர்களின் நிலைபற்றி நாம் – குறிப்பாக தொழுகையாளிகள் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா?  
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும்ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.  இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்அசிரத்தையாக)வும் இருப்போர்.  அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.  மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் (திருக்குர்ஆன் 107:1-7)
அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் அவர்களைப்பற்றி கவலைப் படாதபோது நாம் மட்டும் எதற்காக கவலைப் படவேண்டும் என்று நம்மால் இருக்க முடியுமா? அவர்களைப் பொறுத்தவரையில் இவ்வுலகத்தோடு அனைத்தும் முடிந்துவிடுகிறது என்று நம்பி வாழ்கிறார்கள். ஆனால் நாம் அப்படியல்லவே! உண்மையான நிலையான வாழ்க்கை மறுமையில்தான் என்பதும் நன்மை செய்வோருக்கு சொர்க்கமும் அல்லாதவர்களுக்கு நரகமும் காத்திருக்கிறது என்பதல்லவா நமது நம்பிக்கை?
நமது தலைவர் – நமக்கு வழிகாட்டி – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் (இறைவிசுவாசி) அல்ல!” (முஸ்னத் அபூயஃலா)என்று கூறியிருப்பதை நாம் அலட்சியம் செய்ய முடியுமா?
உணவு விஷயத்தில் அவர்கள் அதிக தேவையில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் வேறு பல விடங்களில் அவர்கள் தினமும் துன்பத்தில் உழல்பவர்களாக உள்ளார்கள். உதாரணமாக அங்கு குடிசைகளில் வாழும் பெண்களைப் பொறுத்தவரையில் கழிப்பிடம் செல்வது என்பது மிகவும் கடினமான காரியம். அதிகாலையிலோ அல்லது இரவு இருட்டும் வரையிலோ காத்திருந்து அருகாமையில் உள்ள வெட்ட வெளிகளுக்கோ புதர்களுக்கோ சென்றுதான் இயற்கைத் தேவைகளை அப்பெண்கள் நிறைவேற்ற முடியும். அதுவும் மிக ஆபத்து நிறைந்த ஒன்று. அதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திதான் பாலியல் வல்லுறவுகள் கூட நிகழ்கின்றன. நமது குடும்பப் பெண்களுக்கு அப்படி ஒரு நிலை என்றால் நம்மால் உணர்வற்று இருக்க முடியுமா?
பள்ளிவாசல்கள் நலிந்தோரை அரவணைக்கும் தளங்களாக..
மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்ட மனிதர்களுக்காகத்  தோற்றுவிக்கப்பட்ட  சிறந்த சமுதாய மக்கள் அடிக்கடி கூடும் இடம் பள்ளிவாசல்கள். நம்மைப் படைத்த இறைவனின் பொருத்தம் நாடி அங்கு கூடும் தொழுகையாளிகள் நினைத்தால் பள்ளிவாசல்களை அருமையான சமூகசேவை மையங்களாக மாற்ற முடியும். நம்மைச் சுற்றி வாழும் நலிந்தோரை அரவணைக்கும் தளங்களாக பள்ளிவாசல்கள் மாறும்போது அங்கு பல சமூகப் புரட்சிகள் நடைபெறும். நமக்கு இறைவன் வழங்கியுள்ள பொருளாதாரம், கல்வி அறிவு, கணினி அறிவு, தொழில் அறிவு, சட்ட அறிவு, தொழில் அனுபவங்கள், இன்ன பிற திறமைகள் போன்ற பலவற்றையும் ஒருங்கிணைத்து பயன்படுத்த பள்ளிவாசல்களை அருமையான தளங்களாக அமைகின்றன. 
= ஏழைகளுக்கு உணவளித்தல், குழாய்க் கிணறுகள் தோண்டி நீர் வழங்குதல், முதியோர் மற்றும் விதவைகள் ஆதரவு, நோயுற்றோருக்கு மருத்துவ உதவி, மருந்து உதவி, வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டுதல், பள்ளிக்கு செல்ல ஏழைக் குழந்தைகளை ஊக்குவித்தல், உதவுதல், வேலைவாய்ப்பு வழிகாட்டல்கள், ஏற்பாடுகள், தொழில் பயிற்சி, அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய முயலுதல்,  தொழில் அல்லது வியாபாரம் தொடங்க வட்டியில்லா கடன் ஏற்பாடுகள் போன்ற பலவற்றையும் நாம் செய்ய முடியும். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. படிப்படியாக நம்மால் எவை முடியுமோ அவற்றை தக்க கலந்தாலோசனைகளோடும் தகுதியான தலைமையின் கீழும் நாம் செய்ய முடியும்.
.நாம் செய்ய முனையும் சேவைக்கான பொருளாதாரத்தை பள்ளிவாசல்களில் அறிவிப்பு செய்தும் வாட்சப் குழுமங்களில் பகிர்வதன் மூலமும் திரட்ட முடியும். பெரும்பாலான சேவைகளுக்கு அரசாங்கத்திலேயே சிறுபான்மைப் பிரிவுக்கான மானியங்கள் உள்ளதாக அறிகிறோம். இவற்றை  உரிய முறையில் விண்ணப்பிப்பதன் மூலமும் சேவைகளைத் துவங்க முடியும்.
பள்ளிவாசல்களில் நீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்தல்
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம்  2.பயனுள்ள கல்வி  3.இறைவனிடம் பிரார்த்திக்கும்  குழந்தைகள். (அபூஹூரைரா(ரலிமுஸ்லிம்) இந்த நபிமொழியை நம்மில் அனைவரும் கேட்டிருப்போம்.மரணத்திற்குப் பின்னும் நற்கூலி கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நாட்டம் கொண்ட  நம்மில் செல்வந்தர்கள் குழாய்க் கிணறுகளை பள்ளிவாசல் வளாகங்களிலோ அருகாமையிலோ உரிய அனுமதியோடு தோண்டி ஏழைகளுக்கு நீர் விநியோகம் செய்யலாம்.
இன்று பல பள்ளிவாசல்களில் தேவைக்கு அதிகமான பொருளாதாரம் குவிவதை நாம் அறிவோம். அவை பள்ளிவாசல்களை மென்மேலும் மெருகூட்டவும் ஆடம்பர செல்வினங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதை கண்டு வருகிறோம். இப்படிப்பட்ட பொருளாதாரங்களை பள்ளிவாசல்களை ஒட்டியே ஒருசிலக் கழிப்பிடங்களைக் கட்டிப்  பராமரித்தால் அப்பாவி ஏழைப் பெண்களின் துயர் தீரும். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் துன்பத்தில் இருந்தும் மனப்புழுக்கத்தில் இருந்தும் காப்பாற்றப்படுவார்கள். இந்த வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்தவர்களுக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் நற்பேறுகளைப் பற்றி நாம் கூறவும் வேண்டுமா?
பிறர் துன்பம் நீங்க உதவுவோருக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுகிறான். ஒருவன் மற்றவர்களுக்கு உதவும் காலம் வரை அல்லாஹ்வும் அவனுக்கு உதவுவான்” – நபிமொழி (அறிவிப்பு: ஹழ்ரத் அபூஹுரைரா(ரலி) - முஸ்லீம்)
= விதவைகள்ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் செய்பவரைப் போன்றவர் ஆவார். மேலும்இரவு காலங்களில் நின்று வணங்கிபகல் நேரங்களில் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) - புகாரி)
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக