இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சொற்கள்


இஸ்லாம் என்ற உலகளாவிய வாழ்வியல் கொள்கை பலராலும் தவறாகப்புரிந்து கொள்ளப்படுவதற்கு இதுவும் காரணமே...  திருக்குர்ஆனிலும்  முஸ்லிம்களின் இடையேயும் புழங்கும் சில அரபு மொழிப் பதங்கள் முஸ்லிம் அல்லாதவர்களால் – ஏன் பல முஸ்லிம்களாலும் கூட -  தவறாக பொருள் கொள்ளப் படுகின்றன. முதலில் இவற்றைத் தெளிவுபடுத்துவோம்.
அல்லாஹ் என்றால் யார்?
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைத்  திருக்குர்ஆன் அரபுமொழிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது.
 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
இஸ்லாம்  மற்றும் முஸ்லிம்
 . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து அவன் கற்றுத்தரும் நல்லொழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள். இறைவன் தன் வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் கற்றுத் தரும் நல்லொழுக்க நெறிகளை யார் வாழ்வில் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்களே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க ஒழுக்கத்தை பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.

பாவம் மற்றும் புண்ணியம்


இவை நமது மொழிவழக்கில் உள்ள வார்த்தைகளேயானாலும் இவற்றையும் பெரும்பாலான மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் எதை செய்யக் கூடாது என்று கற்பித்தார்களோ  அதையே பாவம் என்று கருதுகின்றனர். சிலர் நாட்டு மக்கள் அல்லது பெரும்பான்மை எதை தீமை என்று தீர்மானிக்கிறார்களோ அதையே பாவம் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் தங்களது மனோ இச்சை எதை தீமை என்று  சொல்கிறதோ அதையே பாவம் என்பர். இவ்வாறே புண்ணியத்தையும் தீர்மானிக்கின்றனர். ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உலகத்துக்கு உரிமையாளனும் பரிபாலகனும் ஆன இறைவன் அவனுக்கு மட்டுமே பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதே. அவனே அனைத்துப் படைப்பினங்களின் நுணுக்கங்களையும் தேவைகளையும் முழுமையாக அறிந்தவனும் அவை ஒவ்வொன்றினதும் உரிமைகளை பங்கிடக் கூடியவனும் அவனே. எல்லாவற்றையும் விட முக்கியமாக மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது வினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளவனும் அவனே. எனவே இறைவன் எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம்! எதை நம்மை செய் என்று ஏவுகிறானோ அதுவே அதுவே புண்ணியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக