இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 அக்டோபர், 2013

இஸ்லாம் வழங்கும் சுதந்திரம்

படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதலையே அரபு மொழியில் இஸ்லாம் என்கிறோம். அவ்வாறு கீழ்ப்படிந்து வாழ்பவர் யாராகினும் அவருக்கே முஸ்லிம் (அதாவது கீழ்படிபவர்) என்று கூறப்படும். ஏக இறைவனை மட்டும் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்று அவன் வழங்கும் வேதத்தையும் அவனது தூதரையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டால் மனித வாழ்வில் மாபெரும் புரட்சிகள் ஏற்ப்படும். மனித சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் நிகழும். மனித உரிமைகள் மீட்டப்பட்டும், அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் பட்டு மனிதன் சுதந்திரக் காற்றை சுவாசிப்பான்.
மட்டுமல்ல, மானிட சமத்துவத்தையும் அனுபவிப்பான்.
மனித சமூகத்தில் அன்று புரையோடிப் போயிருந்த அடிமைத்தளையிலிருந்து மனிதனை எவ்வாறு மெல்லமெல்ல விடுவித்தது என்பதை கீழ்க்கண்ட ஒரு உதாரணத்தின் மூலம் உணரலாம்:
மஃரூர் என்பார் ஒரு நபித்தொழரைப் பற்றிக் கூறுகிறார் :
'நான் நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களை மதீனாவிற்கு அருகிலுள்ள 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் ஆச்சரியமுற்றவனாக அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" .[ஆதாரம் : புஹாரி எண் 30 ]
 அதாவது ஏஜமானனையும் அடிமையையும் ஒரேவிதமான ஆடையில் அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. விசாரித்ததில் நபிகளாரின் கண்டிப்பும் உபதேசமுமே அதற்குக் காரணம் என்பதை அவர் அறிய வருகிறார். நபிகளாரின் உபதேசத்தில் கவனிக்க வேண்டிய உண்மைகள்:
= அடிமைகளும் இறைவனால் படைக்கப் பட்ட மனிதர்களே அவர்கள் உங்கள் சகோதரர்களே!
= அந்த இறைவன்தான் அவர்களை உங்கள் ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்துள்ளான்.
= எனவே அந்த இறைவனின் பொருத்தம் உங்கள் மீது உண்டாக வேண்டுமானால் நீங்கள் அவர்களை உங்கள் சகோதரர்களாகவே பாவித்து நீங்க அனுபவிக்கும் சுகங்களை அவர்களும் அனுபவிக்கச் செய்யவேண்டும்.
= அவர்களுக்கு சிரமமான பணிகளைக் கொடுத்தால் கூடவே உதவவும் செய்ய வேண்டும்.

மேற்படி சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் இவ்வாறுதான் சரித்திரத்தில் பல புரட்சிகளைச் செய்து வந்தது. தொடர்ந்து செய்து வருகிறது! எங்கெல்லாம் இக்கொள்கை நுழைகிறதோ அங்கெல்லாம் மனித உரிமைகள் மறுமலர்ச்சி பெறுகின்றன. மானிட சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலைநாட்டப் படுகின்றன.

திங்கள், 7 அக்டோபர், 2013

பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?

தியாகத் திருநாள் என்று அறியப்படும் பக்ரீத் பண்டிகை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இப்ராஹீம் என்ற இறைத் தூதரின் முன்மாதிரி தியாகங்களை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து அந்நாட்டில் சிலைவழிபாட்டுக் கலாச்சாரத்துக்கு எதிராக தனிமனிதனாக நின்று போராடி ஏக இறைவழிபாட்டை நிலைநாட்ட பாடுபட்ட மகான் அவர்.  அந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்டார். இறையருளால் அதிலிருந்து காப்பாற்றப் பட்டார். தொடர்ந்து தனது துணைவியாரையும் பச்சிளம் பாலகனையும் பாலைவனத்தில் தனியாக விட்டுச் செல்லும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டார். அந்த சோதனையிலும் அம்மூவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அந்த மகன் இஸ்மாயில் நடமாடும் பருவம் அடைந்தபோது அவருக்கு அடுத்த சோதனை இறைவன் புறத்திலிருந்து காத்திருந்தது.........

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம்.. ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இதை இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இறைவனின் நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விவரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. "அன்புத் தந்தையே இறைவன்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். இறைவன் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்" (அல்குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.
 சகோதர, சகோதரிகளே! இந்த வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை இவ்வுலகம் என்பது ஒரு பரீட்சைக்கூடம் என்ற அடிப்படையை புரிந்து கொண்டோமானால் இறைவனின் விருப்பத்திற்கு முன்னால்பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் நாம் துறக்கத் தயாராகி விடுவோம். இறைவனின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள்? இதுதான் இங்கு இவர்களுக்கு முன்னால் வைக்கப் பட்ட சோதனை!
இது ஓர் கடுமையான சோதனைக்கட்டம். இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்தான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை, கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள்அடுத்து ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, அவர்களை சீண்டிப் பார்த்தான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக இறைவனின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள்!.  இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள்.
இந்த முன்மாதிரிக் குடும்பத்தின் (தந்தை, தாய், தனயன்) செய்கையை இறைவன் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை ஹஜ்ஜ் என்ற புனிதக் கடமையில் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான் இறைவன்!  இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக்  கிடத்திக் கழுத்தில் கத்தியை ஓட்டத் தயாராகிறார்கள்.
37:103.ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; நாம் அவரை ''ஓ இப்றாஹீம்!'' என்றழைத்தோம். ''திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
 ''நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.'' ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;  இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக!  இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.. நிச்சயமாக அவர் விசுவாசியான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (அல்குர்ஆன் 37 :103-110)
இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை இறைவன் ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! இறைவனின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் இறைவனுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை  நினைவு கூறும் பொருட்டு அதை பண்டிகை தினமாகக் வழங்கியுள்ளான் இறைவன்! வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபா ஆலயத்தை வலம் வருவதை ஒரு வணக்கமாகவே இறைவன் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபா ஆலயத்தைக் கட்டிய இடம் மகாமே இப்றாஹிம் என்று அறியப்படுகிறது. அதை ஹஜ்ஜின் போது தொழும் இடமாகவும் இறைவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)
தியாகத் திருநாள் நம்முன் ஒரு முக்கியமான விடயத்தை நினைவூட்டி நம்மைப் பரீட்சிக்கிறது. நமது நமது என்று சொந்தம் கொண்டாடும் சொந்த உடல், உறவுகள், உடைமைகள் இவை அனைத்தும் உண்மையில் நமதல்ல. இவற்றின் உரிமையாளன் இறைவனே. இவையனைத்தும் இந்த உலகம் எனும் பரீட்சைக் கூடத்தில் தற்காலிகமாக நமக்கு – இரவலாக – அவனால் தரப் படுபவை. அவற்றைத் தந்தவன் இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்கும்போது நாம் எந்த அளவுக்கு அவற்றை மனமுவந்து திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? ..... இக்கேள்வியை நினைவூட்டவே வருகிறது தியாகத் திருநாள்! இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தப் பரீட்சையின் உச்ச்சகட்டத்தை சந்தித்தார்கள். இதில் வென்று காட்டினார்கள். இறைவனின் நண்பன் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்! இந்நாளில் நம்மில் வசதி உள்ளவர்களுக்கு முன் வைக்கப்படுவது இதன் குறைந்தபட்ச சோதனையே. இறைவன் உணவுக்காக படைத்துள்ள பிராணிகளில் ஒன்றை அவனுக்காக நாம் தியாகம் செய்ய அவர்களுக்கு பணிக்கப்படுகிறது.  உண்மை இறை நம்பிக்கையாளர்களை  கீழ்கண்டவாறு கூற இறைவன் பணிக்கிறான்:
6:162. நீர் கூறும்; ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

 நன்றி: நியாஸ் அஹமது, பெங்களூர் 

சனி, 5 அக்டோபர், 2013

அநீதிகள் அடங்குவது எப்போது?

Related image
அன்றாட நாட்டு நடப்புகளைக் கண்டு மனம் வெதும்பாதவர் யாரையும் இன்று காண்பது அரிது! அநியாயம் செய்தவர்களும் அக்கிரமங்கள் செய்பவர்களும் சுதந்திரமாகத் திரிவதும் நாட்டில் உயர் பதவிகளில் இருந்து ஆதிக்கம் செய்வதும் அதிகரித்து வருகின்றன. அவர்கள் தங்கள் தொண்டர்களால் மரியாதை செய்யப்படுவது மட்டுமல்ல, இஷ்ட தெய்வங்களாக பூஜை செய்யவும் படுகின்றனர்.  கொலை கொள்ளை விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு அப்பட்டமாக கையும் களவுமாக பிடிபடுபவர்கள் அடுத்த நாளே  சிரித்த முகத்தோடு உலா வருவதும் பொதுமக்களை முட்டாள்களாக ஆக்குவதும் தொடர்கின்றன. இவை போன்ற பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றை எல்லாம் காணும் பலரும் இறைவனே இல்லைஎன்றும் இறைவன் இருந்திருந்தால் இந்த அநியாயங்கள் நடக்குமா?’ என்றெல்லாம் புலம்புவதை நாம் அன்றாடம் காண்கிறோம். இதன் காரணமாக சில ஆத்திகர்களும்  நாத்திகத்துக்குத் தாவி விடுகின்றனர். இவர்கள் தங்கள் கண்முன் நடப்பவற்றை மட்டும் காண்கிறார்கள். குறுகிய கண்ணோட்டத்தால் உண்மைகளை சிந்திக்க மறுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த புலம்பல்கள் அறியாமையின் வெளிப்பாடுகளே என்பதை சிந்திப்போர் அறியலாம்.

இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் மனிதன் என்ற சிறு ஜீவி தன்னை அனைத்தும் அறிந்தவனாக பாவித்துக் கொள்வதால்தான் இந்த குறுகிய மனப்பான்மை உண்டாகிறது. தனக்குத் தெரியாதவற்றையும் தன் புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாதவற்றையும் ஒரேயடியாக இல்லை என்று முடிவு செய்வதும் அதுதான் இன்று பகுத்தறிவுவாதம் என்று சிலரால் தம்பட்டம் அடிக்கப் படுகிறது. மாறாக தன புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாதவற்றைப் பற்றி யாராவது கூறும்போது அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிவதே உண்மையில் பகுத்தறிவு என்பது.
அந்த அடிப்படையில் இவ்வுலக அமைப்பையும் இங்கு காலாகாலமாக நடைபெறுபவற்றையும் ஆராயும்போது இவ்வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்பதையும் இவ்வுலகம் என்பது ஒரு பரீட்சைக்கூடம் என்பதையும் நாம் அறிய முடியும். இறைவேதங்களும் இறைத்தூதர்களும் கூறுவது போல இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின்னர்தான் அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்பிக்கப் பட்டு முழுமையான நியாயத்தீர்ப்பு உண்டாகும் என்பது உண்மை என்பதையும் உணர முடியும்.

உடனுக்குடன் தண்டித்தால் என்ன ஆகும்?

 ஒரு பரீட்சைக் கூடத்தில் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதேனும் மாணவன் தவறாக விடைஎழுதிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு மேற்பார்வையாளர் உடனே குறுக்கிட்டு அந்த மாணவனைத் திருத்தினாலோ அல்லது அவனை உடனேயே தண்டித்தாலோ அங்கு பரீட்சையின் நோக்கம் நிறைவேறுமா? அதைப்போன்றதுதான் இறைவன் நடத்திவரும் பரீட்சையும்! இறைவன் இவ்வுலகு என்ற பரீட்சைக் கூடத்திற்கு ஒரு தவணையை நிச்சயித்துள்ளான். அக்கூடத்திற்குள்  வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு தவணைகளை நிச்சயித்துள்ளான். அனைவருக்கும் அதை முழுமிக்க வாய்ப்பளிக்கிறான். ஒருசிலர் அவசரப் படுவதுபோல இறைவன் விரைந்து ஏன் தண்டிப்பதில்லை? இறைவனே தன் திருமறையில் கூறுகிறான். 
மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள். . (திருக்குர்ஆன் 18:58.)


என்று தணியும் நீதியின் வேட்கை?
  இப்பரீட்சைக்கூடம் ஒருநாள் மூடப்படும். அதற்குப்  பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது இப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகும். அன்று முதல்மனிதன்  முதல் இறுதிமனிதன் வரை அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள். அன்றுதான் இறுதித் தீர்ப்புநாள் ஏற்படுத்தப் படுகிறது. யார் பரீட்சையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் தொல்வியுறுவோருக்கு  நரகமும் விதிக்கப்படும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185..)
ஆம், அன்றுதான் நீதியின் வேட்கை முழுமை பெறும். அன்று இவ்வுலகில் செய்யப்பட்ட அனைத்து அநீதிகளும் மோசடிகளும் மனித உரிமை மீறல்களும் ஒன்றுவிடாமல் வெளிப்படும். அவை யாருமே பார்க்க முடியாது என்று நினைத்து இரகசியமாக செய்யப்பட்டவையானாலும் சரியே. தட்டிக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற மமதையில் அதிகாரம் கொண்டவர்கள் பலவீனமானவர்கள் மீது தொடுத்த அத்துமீறல்கள் ஆனாலும் சரியே. அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அனைவருக்கும் அவரவர் உரிமைகள் முழுமையாக மீட்டப்படும். எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு சின்னஞ்சிறு உரிமைமீறல்களும் கணக்கு தீர்க்கப்பட்டுவிடும்.
நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.
(நூல்: முஸ்லிம் 4679)

அதாவது ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை அன்று இறைவன் வழங்குவான்.
 இவ்வுலகைப் பொறுத்தவரையில் இதுதான் இறைவனின் ஏற்பாடு. இதைத் தட்டிக்கேட்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் மிகமிக அற்பமானவர்கள். நம் சிற்றறிவைக் கொண்டு இப்பரந்த பிரபஞ்சத்தின் படைப்பாளனின் திட்டங்களை ஆராயவும் எடைபோடவும் முடியாது என்பதை ஒப்புக்கொண்டு அவன் தனது தூதர்கள் மூலமாக எதை அறிவித்துத் தருகிறானோ அவற்றை அப்படியே ஏற்பதுதான் அறிவுடைமை! 
--------------- 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html