இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 நவம்பர், 2012

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!


    'ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்' என்று நாம் கூறினோம்.
    ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான். (அல்குர்ஆன் 2:35,36)
    பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு 'ஆன்மா' இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.
    சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.
    இன்றைக்கும் கூட பெண்ணுரிமை என்ற பெயரால் கவர்ச்சி காட்டி ஆண்களை மயக்கக் கூடியவர்களாகவும் தாங்கள் நடந்து கொள்வதற்கு உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர்.
    அந்தக் கோட்பாடுகளை திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றன.
    கடவுள் முதன் முதலில் ஒரே ஜோடிளைத்தான் நேரடியாகப் படைத்தான். அவர்களிலிருந்து பல்கிப் பெருகியதே மனித சமுதாயம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
    கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட தம்பதிகள் குறித்தே மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.
    அவ்விருவரையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கப் பூங்காவில் தங்கச் செய்து அதன் பாக்கியங்களை அனுபவித்துக் கொள்ள அனுமதிக்கின்றான். அந்தக் கட்டத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருத்துடன் கவனிக்கத் தக்கவையாகும்.
    இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு தம்பதியரை விருந்துக்கு அழைத்தால் கணவரிடம் மட்டும் கூறினாலே போதும் என்ற நிலை இருக்கிறது. குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்ற அழைப்பின் காரணமாக - மனைவி தனியாக அழைக்கப்படா விட்டாலும் - மனைவியையும் அழைத்துச் செல்வோர் நாகரீக உலகத்திலும் இருக்கிறார்கள்.
    ஆனால் மனித சமுதாயம் உள்ளிட்ட அகில உலகையும் படைத்த இறைவன், நீங்கள் இருவரும் தங்குங்கள்! நீங்கள் இருவரும் உண்ணுங்கள்! என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறான்.
    பொதுவாக உணவுகள் விஷயத்தில் பெண்களுக்கு என தனி விருப்பம் இருப்பதை ஆண்கள் உணர்வதில்லை. ஆண்கள் எதை வாங்கிப் போடுகிறார்களோ அதை ஆக்கிப் போடுவது மட்டும் தான் மனைவியரின் வேலை என்பது தான் நடைமுறை.
    விருப்பமான உணவுகள் சமைக்கப்பட்டால் கூட சமைத்தவளை மறந்துவிட்டு அனைத்தையும் மேய்ந்து விட்டு பாத்திரத்தைக் காலியாக வைத்துச் செல்லும் கணவர்கள் ஏராளம்.
    ஆனால் படைத்த இறைவன் அப்படிக் கருதவில்லை. நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள் என்கிறான். பெண்களுக்கு தனி விருப்பங்கள் உள்ளன என்கிறான். ஆண் விரும்புவதைத் தான் பெண்ணும் விரும்ப வேண்டும் என்பது கிடையாது என்கிறான்.
    அது ஏதோ இந்த நூற்றாண்டில் கூறப்பட்டதன்று. நபிகள் நாயகம் காலத்தில் கூறப்பட்டதன்று. பெண்ணுரிமைக்காக பலத்த குரல் எழுப்பப்பட்ட போது கூறப்பட்டதன்று. 'ஆன்மா' இருக்கிறதா என்ற சர்ச்சை நடந்த காலத்தில் கூறப்பட்டதுமன்று.
    வேறு எவரும் படைக்கப்படாத நேரத்திலேயே, இரண்டே இரண்டு பேர் மட்டும் படைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே இறைவன் இவ்வாறு கூறிவிட்டான். அதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நினைவு படுத்துகிறான்.
    அதுமட்டுமின்றி இறைவன் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பித்தான். அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கும் போதும் இருவரையும் அழைத்தே தடையுத்தரவைக் கூறுகிறான். நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள் என்ற வாசகத்திலிருந்து இதை உணரலாம்.
    அந்தக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட மரத்தை நெருங்கினார்கள். அந்த நிகழ்ச்சி குறித்து பைபிள் கூறும் போது, ஆதம் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டது போலவும், அவரது மனைவியிடம் தான் ஷைத்தான் கைவரிசையைக் காட்டியதாகவும், அவள் தான் தடையை மீறியதாகவும் குறிப்பிடுகிறது.
    பெண்கள் வழிகெட்டவர்கள், பிறரை வழி கெடுப்பவர்கள், ஆண்கள் மகா பரிசுத்தர்கள் என்று சித்தரிக்கும் வகையில் பைபிள் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.
    ஆனால் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் அதை மறுக்கின்றன.
   ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு கடவுளின் கட்டளையை இருவரும் தான் மீறினார்கள். தடை செய்யப்பட்டவைகளை விரும்புவது பெண்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆண்களும் அத்தன்மையைப் பெற்றவர்கள் தாம் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
    மனிதன் என்ற தன்மை, அதாவது ஆசை, கோபம், கடவுளின் கட்டளையை மீறுதல், மனோ இச்சைக்கு அடிபணிதல் ஆகிய குணாதியங்கள் பெண்களிடம் இருப்பது போலவே ஆண்களிடமும் உள்ளன. அதனால் தான் இருவரும் பாவம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    அது மாத்திரமின்றி தவறுகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் இன்றைய உலகில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.
    ஆண்களின் தவறுகள், 'ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்' என்ற வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன.
    அதே போல் தவறுகளுக்காக பெண்கள் தண்டிக்கப்படும் போது, 'பாவம் பெண்கள்! ஆண்களைப் போல் அவர்களைத் தண்டிக்கலாமா?' என்று பச்சாதாபம் காட்டப்படுகின்றது.
    அந்த இரண்டு தவறான கோட்பாடுகளையும் இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இருவரையும் உடனே வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.
    ஆண் தப்புச் செய்யலாம். பெண் தப்புச் செய்யலாமா என்று கூறி பெண்களை மட்டும் தண்டிக்கவில்லை. பெண் பலவீனமானவள். அவளைத் தண்டிக்க முடியாது. நீ மட்டும் வெளியே போய் விடு என்று ஆணை மட்டும் வெளியேற்றவில்லை.
    அந்த வசனங்கள் இரண்டையும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது உடலமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் மனிதத் தன்மையில் இருவரும் சமமானவர்களே என்று குர்ஆன் கூறுவதை உணரலாம்.
    மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கோட்பாடு தான் உலகின் முதல் கோட்பாடு மனிதர்கள் தான் அந்தக் கோட்பாடுகளை மாற்றிவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்குத் தான், முதல் தம்பதிகளுக்கு இறைவன் பிறப்பித்த கட்டளையை நினைவுபடுத்துகிறான். 
நன்றி : தாருல் அதர் அத்தஅவிய்யா - கட்டார் கிளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக