இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 நவம்பர், 2012

ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்


திருக்குர்ஆன் முதல்மனிதர் ஆதம் அவர்களுக்குப்பின் மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் நூஹ் அவர்கள் பற்றிக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது அன்றைய கால சூழலையும் மனதில்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். இதில் நமக்கு பல பாடங்கள் அட்ங்கியிருப்பதைக் காணலாம்:
மக்களிடையே சீர்திருத்தம் செய்ய விழைவோருக்கும், சத்தியத்தை ஏற்போருக்கும் சத்தியத்தை மறுப்போருக்கும் பெற வேண்டிய பாடங்கள்  உள்ளன. இவை இவ்வுலக அதிபதியின் வார்த்தைகள் என்பதை மனதில் கொண்டு படியுங்கள்:
அ. துணிவாக சத்தியத்தை எடுத்துரைத்தல்
11:25   .நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.''
11:26   .''நீங்கள் இறைவனை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்'' (என்று கூறினார்).
ஆ. அகங்காரமும் அதிகாரமும் சத்தியத்தை ஏற்கத் தடைக்கற்கள்!
11:27   .அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), ''நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்.
இ. அதிகாரத்துக்கு அடங்காமல் சத்தியத்தை எடுத்துரைத்தல்
11:28   .(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) ''என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?'' என்று கூறினார்.
ஈ. மனித சமத்துவத்தை மறுக்க முடியாது, சத்தியத்தை ஏற்பவரே  மேலானவர். ஆன்மீக சேவைக்கு கூலி மனிதர்களிடமிருந்து அல்ல, இறைவனிடமே! அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தல்!
11:29   .''அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (இறைவன்   கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி இறைவனிடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே இறைநம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
11:30.  ''என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால், இறைவனின்  தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்?  (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
11:31   .''இறைவனுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (வானவர்) என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு இறைவன்  யாரொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை இறைவனே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்).
உ. சத்திய மறுப்புக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இறைவனுக்கே, இறைத்தூதருக்கு அல்ல.
11:32   .(அதற்கு) அவர்கள், ''நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.
11:33   .(அதற்கு) அவர், ''நிச்சயமாக இறைவன் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்'' என்று கூறினார்.
11:34.  ''நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க இறைவன் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (பாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்).
ஊ. இறைநம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
11:36   .மேலும், நூஹூக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; ''(முன்னர்) இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்கள்”
11:37   .''நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.''
எ. பரிகாசங்கள் சத்தியப்பாதையில் சகஜமே! சத்தியமே வெல்லும் என்ற உறுதியோடு போராடவேண்டும்.
11:38   .அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; ''நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்.
11:39   .''அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்'' (என்றும் கூறினார்).
சத்தியத்தை ஏற்போர் சிறுபான்மையினர் ஆயினும் இறுதிவெற்றி சத்தியத்துக்கே! எதிர்பார்த்திராத விதத்தில் இறைவன் உதவி வந்து சேரும்! இறைவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன்!
11:40   .இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், நம்பிக்கை  கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்''  என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் விசுவாசம்  கொள்ளவில்லை.
11:41.  இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் இறைவன் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
11:44.  பின்னர்; ''பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்'' என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
11:48.  ''நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக. இன்னும் சிலமக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்'' என்று கூறப்பட்டது.
11:49.  (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத்தான் (கிட்டும்). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக